Thursday, January 23, 2020

                         பள்ளி காலை வழிபாட்டுச் செயல்பாடுகள்
நாள் : 24.01 . 2020.   வெள்ளிக்கிழமை .
🌸திருக்குறள் : அதிகாரம்:   அறிவுடைமை . 
எப்பொருள் யார் யார் வாய்க் கேட்பினும் அப்பொருள்
மெய்ப்பொருள் காண்ப தறிவு.                                                                                                                                       🌸பொருள்:
   . எந்தவொரு பொருள்குறித்து எவர் எதைச் சொன்னாலும் அதை அப்படியே நம்பி ஏற்றுக் கொள்ளாமல் உண்மை எது என்பதை ஆராய்ந்து தெளிவதுதான் அறிவுடைமையாகும்.
🌸 பொதுஅறிவு:
1. பாரசீகர்கள் இந்தியாவிற்கு கொண்டு வந்தது?
விடை  :    பார்ஸி மதம்.
2.  புதிய கற்கால மனிதன் எந்த நதிக்கரையில் பயிரிட்டான்?
விடை  :  சிந்து. 
3. ரிக் வேதம் உருவான ஆண்டு?
விடை  :  கிமு 2000.
4. கூட்டல் இயந்திரத்தை கண்டுபிடித்தவர்?
விடை   : பாஸ்கல்
5 . கடல் நீரில் இருந்து பிரித்தெடுக்கப்படும் உலோகம் ?
விடை    : சோடியம்  .
பழமொழிகள் (proverbs) :
🌸    Contentment is more than a Kingdom

                  போதும் என்ற மனமே பொன் செய்யும் மருந்து .
🌸     Constant dripping wears away the stone .

           எறும்பு ஊற கல்லும் தேயும்.
இரண்டொழுக்கப் பண்பாடு:
🌸         இனிய சொற்களே இன்பம் பயக்கும் . கடுஞ்சொற்கள் துன்பத்தை உண்டாக்கும் என்பதை நான் அறிவேன்.                                                  🌸 எனவே நான் ஒவ்வொருவரிடமும் எப்பொழுதும்  இனிமையான சொற்களையே பேசுவேன். ஒரு போதும் கடுஞ்சொற்களை  உச்சரிக்க மாட்டேன் அது பிறர் மனதை புண்படுத்தும் என்பதை உணர்ந்து செயல்படுவேன்.
 நீதிக்கதை :
கற்க கசடற’ என்கிறது திருக்குறள். கவனித்தல், கல்விக்கு அத்தனை முக்கியம். கல்வி, கலைகள், பயிற்சிகள்... எதுவாகவும் இருக்கட்டும். கூர்ந்து கவனித்துக் கற்பவன் மட்டுமே அதில் மேதையாக முடியும்; சாதனை புரியவும் முடியும். அதற்கு உதாரணம், அர்ஜூனன். ‘வில்லுக்கு விஜயன்’ எனப் பெயர் எடுத்தவன்... குரு துரோணாச்சாரியாரின் அன்புக்கு பாத்திரமானவன்... அவரின் அத்யந்த சிஷ்யன். அதனாலேயே பலரின் காழ்ப்புக்கும், சிலரின் வெறுப்புக்கும் ஆளானவன். ஒருவன் திறமைசாலியாக மிளிர கவனித்தல் திறன் எவ்வளவு அவசியம் என்பதை துரோணர், மற்றவர்களுக்கு உணர்த்திய சம்பவம் ஒன்று உண்டு.

அது, துரோணருடன் வனத்தில் இருந்த ஆசிரமத்தில் தங்கியிருந்து கௌரவர்களும் பாண்டவர்களும் அப்பியாசம் (பயிற்சி பெறுதல்) பெற்றுக்கொண்டிருந்த காலம். அங்கே வேறு சில அரச குமாரர்களும் வித்தைகள் கற்க வந்திருந்தார்கள். அஸ்திரப் பயிற்சிகளை தம் மாணவர்களுக்கு குரு துரோணர் கற்றுக்கொடுக்கும் பாங்கே அலாதியானது. ஆசிரமத்திலிருந்து மாணவர்களை வெகுதூரம் அழைத்துச் செல்வார். இருந்திருந்தாற்போல் எதையாவது சொல்வார். அவர் சொன்னதை அப்படியே பின்பற்றினால், கற்றுத் தேறிவிடலாம். 

அன்றைக்கும் அப்படித்தான். தன் சிஷ்யர்களுடன் அடர்ந்த வனத்தில் நடந்துகொண்டிருந்தார் துரோணர். உச்சிப்பொழுது நெருங்கிக்கொண்டிருந்தது. மரங்களின் மேல் இருந்த பறவைகள் மனிதர்களின் பெருத்த காலடியோசையில் அதிர்ந்து பறந்து, திரும்ப வந்து அமர்ந்தன. அணில்கள் கிளைவிட்டுக் கிளைக்குத் தாவிக் குதித்து ஓடின. புதர்களில் பதுங்கியிருந்த சிறு முயல்கள் பதறி, குதித்து ஓடின. மாணவர்களுக்கு எல்லையில்லாக் களைப்பு. அன்றைக்கு ஆதவனின் வெப்பம், வனத்தின் குளுமையையும் நீர்த்துப் போகச் செய்திருந்தது. பலருக்கும் வியர்க்கத் தொடங்கியிருந்தது.

ஓர் இடத்தில் நின்றார் துரோணர். மாணவர்களும் தேங்கி நின்றார்கள். தன் பார்வையை மாணவர்களின் மேல் அலையவிட்டார். ஓர் இடத்தில் நிலைகொண்டது அவர் பார்வை. குறிப்பறிந்து, முன்னால் வந்து நின்றான் அர்ஜூனன்.

``காண்டீபா...! வெகு தாகமாக இருக்கிறது. என்ன செய்யலாம்?’’

``ஆணையிடுங்கள் குருதேவா!’’

``ஆசிரமத்தைத் தாண்டி வெகுதூரம் வந்துவிட்டோம். அங்கு போய் நீர் கொணர்வது சாத்தியமில்லாதது. நாம் வரும் வழியில் எங்கோ ஒரு நீர்நிலை இருந்ததாக நினைவு...’’

``ஆம் குருவே! இதோ அருகேதான்... ஒரு காத தூரம்கூட இருக்காது.’’

``அப்படியானால் ஒன்று செய்! அந்தத் தடாகத்துக்குப் போ! எனக்கு நீர் கொண்டு வா!’’

அர்ஜூனன் குருவைப் பணிந்து வணங்கினான். துரோணரின் நீர்க்குடுவையை எடுத்துக்கொண்டான். வந்த வழியே திரும்பி நடந்தான்.

அர்ஜூனன் கண் பார்வையில் இருந்து மறைந்ததும், துரோணர் மாணவர்களை நோக்கித் திரும்பினார்.

``பீமா! அஸ்திரப் பயிற்சியை ஆரம்பிக்கலாமா?’’

பீமன் வாயைத் திறக்கக்கூட இல்லை.

``அர்ஜூனன் இல்லாமலா?’’ கேட்டது துரியோதனன்.

துரோணர், துரியோதனனை வெறித்துப் பார்த்தார்.

``பரவாயில்லை துரியோதனா... அதனால் என்ன?’’

துரியோதனனிடம் இருந்து மறுபேச்சு வரவில்லை. துரோணருக்கு துரியோதனனின் மனநிலை நன்கு தெரியும்.

‘அர்ஜூனனுக்குக் கொடுக்கும் முக்கியத்துவத்தை, நான் மற்றவர்களுக்குக் கொடுப்பதில்லை என நினைக்கிறான். என் பிரியத்துக்கு உரியவன் என்பதாலேயே, சிறப்பு கவனம் கொடுத்து அனைத்தையும் கற்றுக் கொடுப்பதாக எண்ணுகிறான். அது தவறு என்பதை உணரச் செய்ய வேண்டும்...’ யோசனையோடு அத்தனை மாணவர்களையும் பார்த்தார் துரோணர்.

தரையில் அமர்ந்தார், ஒரு குச்சியால் மணலில் ஒரு மந்திரத்தை எழுதினார்.

``இன்றைய அஸ்திரப் பிரயோகத்துக்கான மந்திரம் இதுவே... எல்லோரும் மனனம் செய்துகொள்ளுங்கள்.``

சீடர்கள் முன்னே வந்தார்கள். துரோணர் உரக்க அந்த மந்திரத்தை ஒருமுறை சொன்னார். மந்திரத்தை மாணவர்கள் உள்வாங்கிக்கொண்டார்கள். திரும்ப அவர் எழுதி வைத்ததைப் படித்து உறுதி செய்துகொண்டார்கள். குருதேவர் சற்று அவகாசம் கொடுத்தார்.

``என்ன ஆயிற்றா?’’

``முடிந்தது குரு தேவா!’’ மாணவர்களின் குரல்கள் ஒருசேர ஒலித்தன.

``துரியோதனா உன் தனுசைக் கொடு!’’

துரியோதனன் பவ்யத்தோடு தன் வில்லை நீட்டினான். துரோணர், அவராகவே அவனுடைய அம்புராத்தூளியிலிருந்து ஓர் அம்பை எடுத்தார். வில்லில் நாண் ஏற்றினார்.

``இப்போது மனதுக்குள் அந்த மந்திரத்தைச் சொல்லி பாணத்தை விட வேண்டும். என்ன நடக்கிறதென்று பாருங்கள்!’’

அங்கே நடந்தது மாயாஜாலம். துரோணர் விட்ட அம்பு, எதிரே இருந்த ஆல மரத்தை நோக்கிப் போனது. சில விநாடிகள்தான். மரத்தில் இருந்த அத்தனை இலைகளிலும், ஒன்றுவிடாமல் துளையிட்டது. சரியாக ஓர் இலையில் ஒரு துளை! பிறகு, துரோணரிடமே திரும்பி வந்தது.

மாணவர்கள் ஆச்சர்யத்தோடு பார்த்தார்கள். அந்த மந்திரத்தைத் திரும்பத் திரும்பத் தங்களுக்குள் சொல்லி மனனம் செய்துகொண்டார்கள்.

``மேலே செல்லலாமா?’’

துரியோதனன், குருவிடம் இருந்து வில்லையும் அம்பையும் வாங்கிக்கொண்டான். எல்லோரும் குருவின் பின்னே நடந்தார்கள். 

***

அப்போது, அர்ஜூனன் குடுவையில் நீரை நிரப்பிக்கொண்டு துரோணரும் மற்றவர்களும் சென்ற பாதையில் வந்துகொண்டிருந்தான். குருவும் மற்றவர்களும் இருந்த இடத்துக்கு வந்தபோது துரோணர் மணலில் கிறுக்கியிருந்த மந்திரத்தைப் பார்த்தான்; படித்தான்; தன் காண்டீபத்தை எடுத்தான்; மந்திரத்தைச் சொல்லி அம்பு தொடுத்தான். அது துரோணர் விட்டதைப்போலவே ஆல மரத்தை நோக்கிப் பறந்தது. எல்லா இலைகளிலும் சில விநாடிகளில் மற்றொரு துளையைப் போட்டுவிட்டுத் திரும்பி வந்தது.

அர்ஜூனன் திருப்தியோடு, குருவைத் தேடிப் போனான்.

***

எல்லோரும் அன்றைய பயிற்சி முடிந்து திரும்பி வந்துகொண்டிருந்தார்கள். அர்ஜூனன் கொண்டு வந்து தந்திருந்த நீர் அவர்களின் தாகத்தைத் தணித்திருந்தது. பழைய இடத்துக்கு வந்தபோது, அனைவரின் கண்களும் துரோணர் அம்புவிட்ட மரத்தில் நிலைகுத்தி நின்றன. துரியோதனனின் விழிகள் ஆச்சர்யத்தால் விரிந்தன.

``குரு தேவரே! தாங்கள், மரத்தின் இலைகளில் ஓர் துளைதானே இட்டிருந்தீர்கள்... இந்த மர இலைகளில் மற்றொரு துளையும் சேர்ந்திருக்கிறதே!’’

``இன்னுமா உனக்குப் புரியவில்லை. இது அர்ஜூனன் எய்த அம்பில் விளைந்தது.’’

``அது எப்படி? நீங்கள் இதைக் கற்றுக் கொடுத்தபோது அவன் இல்லையே!’’

``எப்படிக் கற்றாய்... நீயே சொல் அர்ஜூனா!’’ துரோணர் அர்ஜூனனை நோக்கிச் சொன்னார்.

அர்ஜூனன், மணலில் குரு எழுதிய மந்திரத்தைப் படித்ததையும், அம்பு எய்ததையும் கூறினான்.

``இப்போது புரிந்ததா? ஒரு மாணவன் எப்படி இருக்க வேண்டும் என்பதற்கு உதாரணம் அர்ஜூனன். அவனுடைய கவனித்தல் திறனுக்கு இது ஒரு சான்று. இன்றைக்கு நான் அஸ்திரப் பிரயோகத்தில் ஒன்றைக் கற்றுக்கொடுப்பேன் என்றதுமே அவன் கவனம் எல்லாம் அதிலேயே குவிந்துவிட்டது. `எப்போது... எப்போது...’ என என் பயிற்சி குறித்தே யோசித்திருக்கிறான். அந்த கவனித்தல், அவனைத் தரையைப் பார்த்தபடியே நடந்துவரச் செய்திருக்கிறது. மந்திரத்தைப் பார்த்தான்... படித்தான்... கற்றான்...’’

எந்த விஷயத்தையும் கூர்ந்து கவனித்தல் ஒருவனை மேதையாக்கும். எந்த குருவாக இருந்தாலும், தன் சிஷ்யர்களை `கவனி... கவனி... கவனித்தல் முக்கியம்’ என அடிக்காத குறையாக வலியுறுத்துவது இதன் காரணமாகத்தான். துரியோதனன் அன்றைக்கு முக்கியமான பாடத்தைக் கற்றிருந்தான்... மண்டியிட்டு வீழ்ந்து மனதார குருவை வணங்கினான்.



இன்றைய முக்கிய செய்திகள் :

🌸 தமிழகத்துக்குள் எங்கு வேண்டுமானாலும் ரேஷன் பொருள்கள் வாங்கலாம்: அரசாணை வெளியீடு.
🌸 தமிழகத்தில் 36 புதிய தொழில் திட்டங்கள் . தரமணியில் தகவல் தொழில்நுட்ப வளாகம்: 70 ஆயிரம் பேருக்கு வேலைவாய்ப்பு என  முதல் முதல்வர் எடப்பாடி கே பழனிசாமி தகவல்.
🌸 மாநகராட்சி, நகராட்சிகளுக்கான உள்ளாட்சித் தோ்தலை நடத்தக்கோரி மனு: 3 வாரங்களில் பதிலளிக்க தோ்தல் ஆணையத்துக்கு உத்தரவு
🌸 ஊராட்சிமன்றத் தலைவர்களுக்கு அறிமுக பயிற்சி வகுப்பு.
🌸 திருச்சியில் நாளை தாழ்த்தப்பட்டோருக்கான வேலைவாய்ப்பு முகாம்.
🌸 60 சதவீத மானியத்தில் சூரிய சக்தி உலர்ப்பான்கள் விவசாயிகள் விண்ணப்பிக்க அழைப்பு.
🌸 பத்தாம் வகுப்பு மாதிரி வினாத்தாள் வெளியீடு .
🌸 அரசு பாலிடெக்னிக் விரிவுரையாளர் பணிக்கு மே முதல் வாரத்தில் தேர்வு : டிஆர்பி அறிவிப்பு.
🌸 உபரியாக உள்ள 1706 ஆசிரியர் பணியிடங்கள் அரசிடம் ஒப்படைப்பு .
🌸 தொடக்கக் கல்வி பட்டயத் தேர்வு : கால அட்டவணை வெளியீடு.
🌸 5 ,8  வகுப்பு பொது தேர்வு எழுதும் மாணவர்களுக்குத் தேர்வு கட்டணம் கிடையாது.
🌸 குடியரசு தினம் : ஜம்மு காஷ்மீரில் பாதுகாப்பு அதிகரிப்பு .
🌸 காஷ்மீரில் மூன்றாவது நபா்தலையீட்டுக்கு அனுமதியில்லை: வெளியுறவு அமைச்சகம்
🌸 முதல்வருக்கும் எனக்குமான மோதல் புதுவையின் நலனுக்காகவே!: கிரண் பேடி கருத்து.
🌸 சுற்றுச்சூழல் போட்டியில் அம்பத்தூா் அரசுப் பள்ளி முதலிடம்
🌸 புதிய கரோனா வைரஸ் பாம்புகளிடம் இருந்து மனிதர்களுக்கு பரவல்.
🌸 இந்தியாவுடனான வா்த்தகம் கணிசமாக சரிவு: பாகிஸ்தான்
🌸 டேபிள் டென்னிஸ்: ஒலிம்பிக் போட்டிக்கு தகுதி பெற இந்திய அணிகளுக்கு வாய்ப்பு
🌸 ஆஸி. ஓபன்: மெத்வதேவ், நடால் முன்னேற்றம்; சானியா மிா்ஸா வெளியேற்றம்
🌸 முதல் டெஸ்ட்: இலங்கை வெற்றி


Today English news: 

🌸 Tamil Nadu rolls out ration card portability
🌸 Indian nurse tested positive for coronavirus not infected with Wuhan strain.
🌸 President’s J&K order has become fait accompli, says govt in SC .
🌸 The condemned can’t fight endlessly, says CJI
  🌸 Support Centre in bid to throw out illegal immigrants: Raj
🌸  Kaveri river to get new facade. Project approved by committee under smart city mission.
🌸 CB - CID  to investigate scam in group 4 examination .
🌸 'J&k's sovereignty was only temporary.
🌸 Upbat India hits the ground running in  New Zealand.
🌸 India's dependency on kohlii has lessened : shastri.

இனிய காலை வணக்கம் ....✍       
இரா மணிகண்டன் பட்டதாரி தமிழ் ஆசிரியர்
அரசு மேல்நிலைப்பள்ளி
வலையூர்
திருச்சிராப்பள்ளி மாவட்டம்-621005
அலைபேசி எண்: 9789334642 .                                       



No comments:

Post a Comment

தமிழன்னையின் அணிகலன்களாக ஐம்பெருங்காப்பியங்கள்.

  தமிழன்னையின் அணிகலன்களாக ஐம்பெருங்காப்பியங்களை குறிப்பிடும் கவிஞர் சுதானந்த பாரதியார்   🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁 "காதொளிரும் குண்...