தமிழ் இலக்கியத் திறனறித் தேர்வினை எழுத இருக்கும் பதினோராம் வகுப்பு மாணவர்களுக்கு தேர்வினை எப்படி எதிர்கொள்வது என்பது குறித்து ஓர் பார்வை :
![]() |
இரா.மணிகண்டன் முதுகலைத் தமிழாசிரியர் அ.ஆ.மே.நி.பள்ளி கீரனூர் புதுக்கோட்டை மாவட்டம் - 622502. |
வருகின்ற
அக்டோபர் 15-ஆம்
தேதி 2022-ஆம்
ஆண்டுக்கான தமிழ் இலக்கியத் திறனறித் தேர்வினை எழுத இருக்கும் பதினோராம் வகுப்பு
அனைத்து மாணவர்களுக்கும் இனிய வணக்கத்தை தெரிவித்துக் கொள்கிறேன்.
தேர்வு
என்பது நம்மை அச்சுறுத்தும் இயந்திரமோ
அல்லது கருவியோ இல்லை. நம்
அறிவுத்திறனை சோதிக்கும் ஒரு நிகழ்வு மட்டுமே. தேர்வு என்பது மாணவர்களுக்கு ஒன்றும் புதிதல்ல.
நீங்கள் வகுப்பறையில் எத்தனையோ தேர்வுகள் எழுதி இருப்பீர்கள்.சிறுசிறு பகுதிகளைத் தேர்வாக எழுதிய
அனுபவமும் மற்றும் பருவத்திற்குரிய பகுதிகளைத் தேர்வு எழுதிய அனுபவமும் உங்களுக்கு
உண்டு. எழுதப்போகும்
தேர்வு ஆறாம் வகுப்பு முதல் தாங்கள் இதுவரைப்பயின்ற தமிழ் பாடங்களை
நினைவுபடுத்தும் அல்லது மீட்டுக்கொணரும் ஒரு நிகழ்வே நீங்கள் எதிர் கொள்ள
இருக்கும் இந்த தமிழ் இலக்கியத் திறனறித் தேர்வாகும்.
நீங்கள் எழுதப்போகும் இந்தத் தேர்வு மிகவும்
எளிமையாகவே இருக்கும்.
அச்சம் தவிர்க்க வேண்டும்.தேர்வில்
வெற்றி பெற மற்றும் முதன்மை பெற முதலில் நாம் அனைவரும் செய்ய வேண்டியது “திட்டமிடல்” திட்டமிடல் என்பது நமக்கு இருக்கின்ற நேரத்தில்
எந்த வகையில் படித்தால் தேர்வுக்குரிய பாடப் பகுதியை முழுமையாக படிக்க முடியும் என்பதை
அறிவது தான்.முதலில்
நாம் செய்ய வேண்டியது ஒவ்வொரு வகுப்பிலும் எந்தெந்த பாடங்கள் இருக்கிறது என்பதை
நினைவில் வைத்துக் கொள்ள முயற்சி செய்ய வேண்டும். அதற்கான பயிற்சியும் எடுத்துக் கொள்ள வேண்டும். பாடத்தை புரிந்து படித்தால் தான்
எந்த பாடத்தில் என்ன கூறியிருக்கிறார்கள் என்பது எளிதில் நமக்கு மறக்காது. தேர்வுக்கு படிப்பதற்கு போதிய காலம் இன்மையால்
வருத்தப்பட வேண்டாம் உங்களுக்கு எவ்வளவு படிக்க முடியுமோ? அதனை மட்டும் தெளிவாக புரிந்து
படித்தால் போதும்.
ஒவ்வொரு பாடப்பகுதியையும் படித்து முடித்தவுடன் முடிந்தால் அந்தப் பாடப்பகுதியை
ஒரு மன வரைபடமாக எழுதிப் பழகவும்.
அப்பொழுதுதான் நாம் படித்ததை நினைவு படுத்த முடியும் .எனவே தேர்வுக்கு நீண்ட நேரம்
தொடர்ந்து படித்தால் மட்டும் வெற்றி பெற முடியாது. படித்த செய்திகளை அவ்வப்போது நினைவுபடுத்தி மீட்டுக்
கொணரும் பயிற்சியை யார் அதிகம் மேற்கொள்கிறார்களோ அவர்களால் மட்டுமே அதிக
மதிப்பெண் பெற்று வெற்றியாளராகத் திகழ முடியும்.
எனவே முதலில் நமக்கு
நம்பிக்கை வேண்டும். இந்த
தேர்வில் கண்டிப்பாக நம்மால் வெற்றி பெற முடியும் என்ற சிந்தனை அனைவருக்கும்
இருக்க வேண்டும். நம்பிக்கைதான்
வெற்றிக்கான முதல் படி.
நம்பிக்கையோடு படிக்கும் போது நம்மை சூழ்ந்துள்ள அச்சம் தானாகவே நம்மை விட்டு
விலகும். கொரோனா
காலத்தில் தொடர்ந்து
இரண்டு ஆண்டுகள் பள்ளிக்கு வர முடியாமல் பாடங்களை படிக்க முடியாமல் நீங்கள்
இருந்தீர்கள் என்பதை இந்த நாடும், உலகமும் மற்றும் நமது பள்ளிக் கல்வித்துறையும் அறியும்.
எனவே நீங்கள் எதிர்கொள்ள கூடிய வகையிலேயே எளிமையான முறையில் வினாக்கள் எளிமையாக அமையும் என்பது
எனது கருத்து.
ஒரு
வியாபாரி புதியதாக
உணவகம் திறக்கும் பொழுது அந்த உணவகத்தின் உணவின் தரம் முதல் நாள் நன்றாக இருக்கும்.
வாடிக்கையாளர் நம்பிக்கையை பெற ஆரம்பத்தில் உணவின் தரத்தில் குறைவில்லாமல்
பார்த்துக் கொள்வர். அதுபோல முதன்முதலாக பள்ளி மாணவர்களுக்கான தமிழ் இலக்கியத்
திறனறித் தேர்வினை தொடங்கி வைப்பவர்கள் 2022-ஆம் ஆண்டில் அடியெடுத்து வைத்துள்ள பதினோராம்
வகுப்பு மாணவர்களாகிய நீங்களே. எனவே
நீங்கள் எதிர்பார்க்கக் கூடிய பெரும்பான்மை வினாக்கள் தேர்வில் கட்டாயம் வரும். கடின வினாக்கள் என்பது பெரும்பான்மை
தவிர்க்கப்படும் என்பது எனது கருத்து.எளிய வினாக்களையாவது மாணவர்கள் நன்கு முழுமையாகப் புரிந்து கொண்டு உள்ளார்களா?
என்பதை சோதித்து அறியும் ஒரு தேர்வே நீங்கள் எழுத இருக்கும் இந்த தமிழ் இலக்கியத் திறனறித் தேர்வு. தேர்வு எழுதும் மாணவர்கள்
வினாத்தாளினை முழுமையாகப் படித்து வினாக்களை முழுமையாகப் புரிந்து கொண்டு தேர்வு
எழுதவும். நிச்சயம் நூறு சதவீதம் எளிமையான வினாக்களே
இருக்கும் என்று நம்பிக்கையோடு இருங்கள். முதல் ஆண்டு என்பதால் தேர்வு நிச்சயம்
கடினமாக இருக்காது. எனவே வினாத்தாள் எளிமையாக இருக்கும் என்பதால் வெற்றியும்
உங்களுக்கு எளிமையே. எனவே
அனைத்து மாணவர்களும் நம்பிக்கையோடு தேர்வினை எதிர்கொண்டு அனைவரும் வெற்றி பெற
வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறேன்.
No comments:
Post a Comment